Pages

Wednesday, July 6, 2011

கேரளா கோவில் பொக்கிஷம்

மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கேரளா கோவில் பொக்கிஷம் திறக்கப்பட்ட மூன்று அறைகளில் உள்ளவற்றின் மதிப்பு மட்டுமே இன்றைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.அறைகள் திறக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த குழுத் தலைவர் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையில் இப்பணி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.

மன்னர் குடும்பத்து எளிமை : இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.
பாதுகாப்பு எவ்வாறு?பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் கைகளுக்கு வந்த பல்வேறு கோவில்களில் இருந்த அளப்பரிய செல்வங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கே சென்றதும், அதன் பின் அவை பற்றிய தகவல்களே கிடைக்காததும், அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையும் தான் அறிஞர்களின் கவலைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.
இதுகுறித்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தச் செல்வங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கக் கூடாது. இவை அனைத்தும் பழைய நிர்வாக முறைப்படி திருவிதாங்கூர் அரச குடும்பத்தாலேயே கோவிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுகளால் எடுக்கப்பட்ட கோவில்களில் இருந்த செல்வங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும், மோசடி செய்யப்பட்டதும் நாம் அறிவோம். அது போன்ற சம்பவங்கள் இந்தக் கோவிலில் நடக்கக் கூடாது.கோவிலிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதில் சில முக்கியமான பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்து விட்டு, மற்றவற்றை ரகசிய அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.
வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜி.சசிபூஷண், "வருங்கால தலைமுறைக்கும் இவை பற்றிய தகவல்கள் சேர வேண்டுமானால் இவை அனைத்தும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.
அதேபோல், வி.எச்.பி., நாயர் சர்வீஸ் சொசைட்டி, நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மத்திய அல்லது மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இவற்றை கோவில் சொத்துகள் என அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.அரசன் அன்று கொல்வான் , தெய்வம் நின்றும் கொள்ளும் என்ற பழமொழி பல ஆயிரம் சக்தி இன்று  பெற்றுள்ளது உண்மைதான் .